சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் தனி பிரிவில் கொடுக்கப்படும் மனு மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சென்னை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வரிசையில் காத்திருந்தனர்.
பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பு
இன்று (ஆக.19) பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். மக்களை உள்ளே அனுமதிக்காமல் அலுவலர்கள் மனுக்களை வாங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில் காவல் துறையினர் குறைந்த அளவில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பெண்ணிற்கு பலத்த காயம்
பொதுமக்கள் தகுந்த இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்க இடமின்றி காத்திருந்தனர். அப்போது 15 அடி கண்காணிப்பு கேமரா கம்பம் கீழே விழுந்ததில் வட சென்னையை சேர்ந்த 65 வயது மதிக்கதக்க பெண்ணின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசு அலுவலர்கள் அலட்சியம்
இந்த சம்பவத்திற்கு பின்னும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். அரசு அலுவலர்களும், காவல் துறையினரும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தாமல் இருந்தனர். பொதுமக்கள் பலர் தங்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திமுகவினர் பொதுமக்களிடம் வலியுறுத்தல்
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தால் உடனடியாக வீடுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தொடர்ந்து திமுகவினர் பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
தொற்று பரவும் அபாயம்
இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தலைமை செயலக வளாகத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடநாடு வழக்கை திசை திருப்புகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி