சென்னை: தரமணியில் உள்ள பத்திரிக்கையாளர் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் சென்னை காவல்துறையை டேக் செய்து புகார் ஒன்றை அளித்துள்ளார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கும் அவர், தோழி ஒருவருடன் ஈசிஆர்-ல் இருந்து நேற்றிரவு (செப்.25) தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு உபர் ஆட்டோ மூலம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
விடுதி வந்தவுடன் இறங்கும் போது ஆட்டோ ஓட்டுநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு கதறியதாகவும் உதவிக்கு யாரும் வரவில்லை என்றும் சமூக பதிவிட்டுள்ளார். அதன் பின் காவல்துறையில் புகார் அளித்தும் அரை மணி நேரம் கழித்து பெண் காவலர் இல்லாமல் காவலர் ஒருவர் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தான் தங்கியிருக்கும் விடுதி ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோதும் அதை தடுக்கும் விதமாகவே காவலர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்று கூறி காவல் நிலையத்தின் வெளியிலேயே புகாரை எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் இன்று (செப்.26) காலை பெண் காவலர் ஒருவர், தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டதாகவும், ஆனால் இந்த விவகாரம் குறித்து தொடர்பு கொள்ள எந்தவித செல்போன் எண்ணையும் அவர் தரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் புகார் அளிக்கும் போது சம்பந்தப்பட்ட ஆட்டோ புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்தது தொடர்பான தகவல்கள் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் புகைப்படம் ஆகியவை அனைத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதற்கு பதில் அளித்த சென்னை காவல் துறை, தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட தாம்பரம் காவல் துறைக்கு டேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உபர் நிறுவனமும் சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த விவகாரம் தொடர்பாக தகவல்களையும் கேட்டுள்ளது.
தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாக தாம்பரம் காவல் துறை சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்.. படுகாயம் அடைந்த சிறுமி