சென்னை: 28 வயது பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு தேவாலயத்திற்குச்செல்லும் போது கானா பாடல் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சபேஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சபேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் இதனால் தன்னுடன் தனியாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி தொடர்ந்து சபேஷ் சாலமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை செல்வகுமாரிடம் தெரிவித்தபோதும் மகனுக்கு உடந்தையாக செயல்பட்டு, தன்னை மிரட்டியதாகப் புகாரில் கூறியுள்ளார். மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூ-ட்யூப் சேனலில் தன்னுடைய ஆபாசமான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
சபேஷ் சாலமன் இசையமைப்பாளர் என்பதால் கானா பாட்டு பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் யூ-ட்யூபரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: லோன் செயலியால் இளைஞர் தற்கொலை: பணம் செலுத்தாததால் நிர்வாணப்படம் வெளியிட்டு மிரட்டிய நிர்வாகிகள்