சென்னை: வால்டாக்ஸ் சாலையிலுள்ள தனியார் விடுதியில் கடந்த 26ஆம் தேதியன்று இரவு சிலர் தகராறில் ஈடுபடுவதாக பூக்கடை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு நான்கு சிறுமிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உடனடியாக சிறுமிகளை புரசைவாக்கத்திலுள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்து சிறுமிகள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாகவே தகவல் அளித்துள்ளனர். இதனால், சிறுமிகளிடம் குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து குழந்தைகள் நலக் குழு அலுவலர் லலிதா, பூக்கடை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “திரிபுரா மாநிலம் சிவஜலா பகுதியைச் சேர்ந்த சலமா கத்தூண் (38) என்ற பெண் திரிபுராவில் இருந்து 17 வயதுடைய மூன்று சிறுமிகள், 14 வயதுடைய ஒரு சிறுமி என நான்கு சிறுமிகளைச் சென்னையில் உள்ள பியூட்டி பார்லரில் மசாஜ் வேலைக்கு அழைத்து வந்துள்ளார். இதற்காக, சிறுமிகளின் பெற்றோர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
சென்னை வந்தவர்கள் கடந்த ஜன. 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கேளம்பாக்கம் படூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு அலாவுதீன், மைனுதீன் ஆகிய இருவர் சிறுமிகளை தடி, பெல்ட் போன்றவற்றால் அடித்தும், அவர்களை நிர்வாணமாகப் படமும் எடுத்துள்ளனர். மேலும், தாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் எங்கும் இங்கு நடப்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
கடந்த 22ஆம் தேதியன்று 14 வயது சிறுமியை அலாவுதீன் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தும் வந்துள்ளனர். கேளம்பாக்கம் பகுதியில் ஓர் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் காவல் துறையினருக்கு சலமா கத்தூண் பணம் கொடுத்துவிட்டு சிறுமிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அசல் என்பவர் உதவியுடன் பெங்களூருக்குத் தப்பிச் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து 26ஆம் தேதியன்று வால்டாக்ஸ் சாலையிலுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
எனவே சிறுமிகளை வன்புணர்வு செய்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமிகளைத் திரிபுராவில் இருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சலமா கத்தூண், சிறுமிகளை வன்புணர்வு செய்த அலாவுதீன், மைனுதீன், அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சலமா கத்தூண் வால்டாக்ஸ் சாலையில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்துசென்ற காவல் துறையினர், அவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள அலாவுதீன், மைனுதீன், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் போலி ஐ.ஏ.எஸ் அலுவலர் கைது