சென்னை: பூக்கடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் பூக்கடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி(32) என்பது தெரியவந்தது. பல வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சினிமா பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து குட்கா பொருட்களை கடத்தல் - 4 பேர் கைது!