கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருப்பவர்கள் தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசின் உத்தரவை மீறி கடந்த 8ஆம் தேதி அனுமதியின்றி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பதுங்கியிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர் நோய்த்தொற்று பரவுதல், சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெளிநாட்டினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 12 பேருக்கும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்தபிறகு அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும், வெளிநாட்டினர் 12 பேருக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளதால், நேற்று (ஏப்ரல் 20) சென்னைக்கு அழைத்துவந்த காவல் துறையினர், ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு 12 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் தவித்த 169 வெளிநாட்டினர்: சிறப்பு விமானத்தில் அனுப்பிவைப்பு