இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,”தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு 2021ஆம் ஆண்டின் பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை, ஒரு முழு கரும்பு அடங்கிய தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணத்தை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அந்த ரொக்கத் தொகையை ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடர்புடைய நியாயவிலைக் கடையிலேயே வழங்கவேண்டும். அட்டைதாரர் கூட்டமாக வருவதைத் தடுக்கும் வண்ணம் நாளொன்றுக்கு 200 அட்டைதாரர்கள் அதிகபட்சமாக வரக்கூடிய வகையில் டோக்கன்கள் தயார் செய்ய வேண்டும்.
அந்த டோக்கனை டிசம்பர் 26ஆம் தேதி முதல் வீடுவீடாக சென்று நியாயவிலைக்கடை பணியாளர்கள் வாயிலாக விநியோகிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த அறிவுரைகளை சரியான முறையில் பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, டோக்கன்களை அச்சிட்டு (குடும்ப அட்டை விவரங்கள் மற்றும் நாள் / நேரம்) கடை பணியாளர்களால் பூர்த்தி செய்யப்பட்டு அட்டைதாரர்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.
எக்காரணத்தை கொண்டும் நியாயவிலைக் கடைக்கு தொடர்பு இல்லாத நபர்களை இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது. வெளிநபர்களால் டோக்கன் வழங்கப்படுவதற்கு அனுமதியில்லை. நியாய விலைக்கடை நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு!