சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீர் நிலைகளையும் சிறப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யலாம் என்ற சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களுக்கான பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்ட சட்டமசோதாவிற்கு ஏற்கனவே திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் நீர் நிலைகளை அழிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள மசோதவிற்கும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவினர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டமசோதா ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்கிற வகையில் கண்டிக்கப்பட வேண்டியது.
நீர் நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கவே தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவிற்கான நோக்கக் காரண விளக்கவுரையில், நிலமானது மாநிலத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக தோன்றியுள்ளன. உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களால் நிலங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் அரசு நிலத்திற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாக உத்தரவுகள், குறிப்பாணைகளை பிறப்பிப்பதால் நிலத்தை ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது நேரம் மற்றும் பண இழப்புக்கு வழிவகுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டு போக்கை மாற்றிக் கொள்கின்றன. இவை பொதுநலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின்படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில் அதை வழங்க வேண்டும். இந்த நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், நீர் நிலையைப் பாதுகாப்பதற்கும்
இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இம்மசோதாவின்படி 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர் நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு(water storage) குறைக்கப்படமாட்டாது. வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என இம்மசோதா கூறுகிறது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசு மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து, ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அந்த வரைவு திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும். இந்த நடைமுறை முழுவதும் முழுக்க முழுக்க திட்டங்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் என்கிற வாய்ப்பே, இங்கு இல்லை. அரசும் ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயும் திட்டத்தை சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் நிராகரிக்கலாம் என்கிற சரத்தே இல்லை.
மேலும் இந்த ஒட்டுமொத்த மசோதாவிலும் அரசு ஒரு நீர் நிலையை, ஓடையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு நீர் நிலை என்பது தனித்த சூழல் அமைவு கிடையாது. அருகிலுள்ள வேளாண் நிலத்தோடோ, மேய்ச்சல் நிலத்தோடோ அல்லது கால்நடைகளுக்கு நீர் ஆதரமாகவோ எனப் பல பயன்பாடுகளை உள்ளடக்கிய பெரும் சூழல் சங்கிலியின் கண்ணியாக நீர்நிலை உள்ளது.
நீர்நிலையை மட்டும் வைத்துவிட்டு, அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்த நீர் நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். கடந்த ஆண்டு நடந்த உயிர்ப்பன்மயத்துக்கான உச்சி மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் 30% நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
நீர்நிலைகளைப் பாதுகாக்க எத்தனையோ உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன. இவை அனைத்திற்கும்
எதிராக அமைந்துள்ளது இச்சட்ட மசோதா. நீர் நிலைகள் உள்ளடங்கிய 100 ஏக்கர் அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர் நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது, இந்த சட்ட மசோதா.
இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நீர் நிலைகளில் அமைக்க மட்டுமே ஏதுவாக இருக்கும். மேலும் நீர் நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. எனவே, உடனடியாக இச்சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்'' என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: Anna University: சிவில் உள்ளிட்ட 4 பாடங்களில் சேர்க்கை இடங்கள் குறைப்பு!