கோவிட்-19 ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்புகளின்றி வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென தமிழ்நாடு சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் இயக்குநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துவருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு-குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள், திரையரங்கம் என அனைத்துவிதமான தொழில் நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, தகுந்த இடைவெளியைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வெளியே வருவதும், பயணப்படுவதும் முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் தனியார் கார் நிறுவனங்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலைவாய்ப்புகளின்றி இருக்கும் இந்த கார்களின் உரிமையாளர்களும், கார் ஓட்டுநர்களும் தற்போதைய சூழலில் கடனும் வாங்க முடியாது நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி உள்ளனர்.
இவர்களில் பலரும் பெரும்பாலான வாகனங்களை கடனில் வாங்கி வைத்திருப்பவர்கள்தான். கார்களை வாடகைக்கு இயக்கி, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்தே இ.எம்.ஐ. செலுத்திவந்த நிலையில், தற்போது வாடகைக் கார்களின் இயக்கமும் தடைசெய்யப்பட்டுள்ளதால் முடங்கிப்போயுள்ளனர்.
இந்நிலையில், வாழ்வாதாரம் முடங்கிப்போயுள்ள வாடகைக் கார் ஓட்டுநர்களிடம் தவணைத் தொகையைச் செலுத்தச் சொல்லி நிதிநிறுவனங்கள் வற்புறுத்திவருவது மேலும் அவர்களுக்கு இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதில் உடனடியாகத் தமிழ்நாடு அரசு தலையிட்டு நிதி நிறுவனங்கள் கெடுபிடி செய்வதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் சுங்கச்சாவடிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வாடகைக் கார்கள் இயக்கவும் அனுமதிக்க வழங்க வேண்டும். இதன்மூலம் வாடகைக் கார் ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றனர்.
எனவே, இத்தொழிலை மேற்கொள்ள தடையில் இருந்து விலக்களிக்குமா என்பதை எதிர்பார்த்து வாடகை கார் ஓட்டுநர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : கரோனா சூழலில் மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் தூரிகை ஆசிரியர்!