தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தது.
இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மே 7இல் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார்.
முன்னதாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால், சமூக நீதி திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
திமுகவின் தேர்தல் அறிக்கையும்... அதிமுக நடத்திய போராட்டமும்
இதற்கிடையே, திமுக தலைமையிலான ஆட்சி பதவியேற்று மூன்று மாதம்கூட நிறைவுபெறாத நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றவில்லை எனக்கூறி, பிரதான சட்டப்பேரவை எதிர்க்கட்சியான அதிமுகவினர் அண்மையில் தங்களது வீடுகளுக்கு முன் நின்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்ற வேண்டாம் என்றும், இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இதற்கிடையே குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை