தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி(மே 20) தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 73 என உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தமிழ்நாடு சுகாதாரத்துறை போராடி வருகிறது.
இந்நிலையில் நீராவி பிடிப்பதால், கரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்றும்; சீனாவின் வூஹான் மாகாணத்தில் பெரும்பாலும் நீராவி பிடித்தே கரோனா நோயினை ஒழித்துள்ளனர் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் இடைவிடாது பரவி வருகின்றன. அது உண்மையிலேயே சரியானதா? நீராவி பிடிப்பதால் கரோனா ஒழிந்துவிடுமா என்பது குறித்து பார்ப்போம்.
சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?
கரோனா நோய்த்தொற்றிற்கு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் தாங்களாகவே வீட்டில் சுயசிகிச்சை எடுத்துக் கொள்வது முற்றிலும் தவறாகும். அதே போல் பொதுமக்கள் ஆவி பிடிப்பதால் அதிகப்படியான காற்று சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும். அதேபோல் வீட்டில் ஒரு குடுவையில் முகத்தை வைத்து ஆவி பிடிக்கும்போது மற்றவர்களும் அதே குடுவையில் ஆவி பிடித்தால் ஒருவேளை வீட்டில் இருப்பவருக்குத் தொற்று இருப்பின் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் வாயைத் திறந்து ஆவி பிடிக்கும்போது, இதே நிலையில் தொற்று மற்றவர்களுக்குப் பரவுகிறது.
சித்த மருத்துவ மாநில மருத்துவக் குழுவானது, உள்ளூர் மற்றும் பிற மருத்துவ முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெளிவுப்படுத்தி உள்ளது. யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பார்த்து சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது.
ஆவி பிடிப்பது என்பது என்ன?
சில காலங்களுக்கு முன் காய்ச்சல், மூக்கடைப்பு, சளி தொந்தரவு, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் பாத்திரத்தல் சுடுநீர் வைத்து யூகலிப்டஸ், ஆடாதொடை இலை உள்ளிட்டவை போட்டு துணியை போர்த்தி, ஆவி பிடிப்பர். இவ்வாறு ஆவிபிடிப்பதால் தொண்டையிலோ, மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும்.
பொதுவாக 80 முதல் 90 டிகிரி வெப்பநிலையில் தான் வைரஸ்கள் ஒழியும். மாறாக, நாம் பயன்படுத்துவது 40-45 டிகிரி வெப்பநிலை தான். இதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கரோனாவில் நடப்பது என்ன?
நுரையீரலில் அதீத உள்காயங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் காற்றை உள்வாங்கி, ரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் செய்யும் நிலையை இழக்கும். இதில் உள்காயங்கள் மிகுந்து இருக்கும் நிலையில், சூடான காற்று அந்த காயங்களில் படுவது என்பது ஆபத்தான பக்க விளைவுகளையும், மிதமான கரோனா நோயாளிகளை, தீவிர கரோனா நோயாளிகளாக உருவாக்கி விடக்கூடும்.
எனவே, மக்களே தயவு செய்து ஆவி பிடித்தல், வேது பிடித்தலை கரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கொண்டு முக்கியமான நேரத்தை வீட்டிலேயே கடத்தி, ஆபத்தான நிலையை அடைந்தபின் மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆகாதீர்கள். வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல்பூர்வமாக நோய்த்தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது.
மேலும் வேது பிடித்ததும் தும்மல், இருமல் வரும். உடனே தொற்றடைந்த ஒருவர், அருகில் தும்முவது மூலம் நோயைப்பரப்புவார். எனவே, இது போன்ற அறிவியல் பூர்வமற்ற விஷயங்களைச் செய்வது மிகவும் தவறு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய நுரையீரல் தொற்று நிபுணர் பிரச்சன்ன தாமஸ், 'அறிவியல்பூர்வமற்ற இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இது பெருவிளைவுகள் ஏற்படுத்தி விடும். தனியாக வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் ஆவி பிடிப்பது கூட நல்லது. ஆனால், குடும்பத்தினரோடு சேர்ந்து ஆவி பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்'எனக் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்துப் பேசிய பொதுமருத்துவர் அரவிந்த் ராஜ்., 'ஆவி பிடிப்பது சைனஸ் நோயாளிக்கு மூக்கடைப்பு நீக்கி புத்துணர்வு அளிக்க மட்டுமே நல்லதே தவிர முற்றிலும் வைரஸைக் கொல்லாது. இது போன்ற விஷயங்களைத் தவிர்த்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கிறார்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதே சரியான சிகிச்சை முறையாக அமையும்.
இதையும் படிங்க: ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனது: திருச்சியில் பரிதாபம்