சென்னை: பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள சசிகலாவை சந்திக்க அமமுக நிர்வாகிகள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை கட்சித் தலைவர் தனியரசு, அதிமுகவின் சில நிர்வாகிகள் என காத்து கொண்டுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அறிவுரைப்படி 2 வார காலம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதால் தி. நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார்.
ஜெ பிறந்தநாள்- சசிகலா திட்டம்
சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூரில் இருந்து தமிழ்நாடு வந்தார். எல்லையில் இருந்து சென்னை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரையும் சந்திக்காமல் தனிமையில், அரசியல் நகர்வுகளை கவனித்து வருகிறார் சசிகலா.
ஜெ பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரடியாக ஜெ நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருக்கும் நிலையில், சசிகலா தி. நகரில் உள்ள இல்லத்திலேயே ஜெ திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் சென்று உறவினர்களைச் சந்திப்பார், அதிமுக பலம் வாய்ந்த தென்மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்து மக்களை சந்திப்பார் என செய்திகள் வெளிவந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே சசிகலா முகாமில் பலத்த அமைதி நிலவுகிறது. இருப்பினும், தேர்தல் அறிவிப்பிற்கு பின் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரம் இருக்கும் வரை அதிமுக தரப்பில் எந்த நிர்வாகியும் சசிகலாவை சந்திக்க வாய்ப்புல்லை எனவும், மீறி யாரேனும் சசிகலாவைச் சந்தித்தால் கட்சி ஒழுங்கு நடவடிக்கை இருக்கும் என்பதால் அதிமுக நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கவனம் கட்சியா, ஆட்சியா?
அதிமுக பொதுச்செயலாளராக நீக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணை மார்ச் 15ஆம் தேதி பட்டியலில் உள்ளது. தேர்தல் நேரத்தில் நெருக்கடி அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
சசிகலாவின் திட்டம் என்பது ஆட்சியை கைப்பற்றுவது அல்ல மாறாக கட்சியை கைப்பற்றுவது மட்டுமே ஒரே திட்டம் என்று தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருவதும் கவனிக்கத்தக்து.
சிறையில் இருந்த சசிகலா கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே பேசும்பொழுது தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும், அன்புக்கு நான் அடிமை அதே சமயம் அடக்குமுறைக்கு நான் அஞ்சமாட்டேன் என பேசி இருந்தார். அதிமுக அலுவலகம் செல்வீர்களா என்ற கேள்விக்கு பொறுத்து இருந்து பாருங்கள், வெகு விரைவில் உங்களை(தொண்டர்களை) சந்திப்பேன் எனப் பதிலளித்திருந்தார்.
அதிமுகவை கைப்பற்றத் திட்டம்!
ஜெ பிறந்தநாளுக்கு பின் தொண்டர்களை சந்திக்கும் திட்டம் உள்ளது என விவரிக்கும் அமமுக தரப்பு நிர்வாகிகள், ஜெ இருந்தபோதே அமைதி அரசியலில்தான் சசிகலா ஈடுபட்டார் என்றும் அமைதிக்கான காரணமாக கூறுகின்றனர்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் எஸ்பி. லஷ்மணன், ஜெ பிறந்தநாளுக்கு பின் சசிகலா நிர்வாகிகளை சந்திக்கலாம், தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின் ஆட்சி அதிகாரம் இருக்காது அதற்கு பின் சில நடவடிக்கை இருக்கலாம், ஒற்றுமையாக இருந்து திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதன் மூலம் அணி இணைப்பை அவர் விரும்புகிறார், அதற்கு சட்டப்போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார். அதிமுகவை கைப்பற்றும் திட்டம் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவிக்கிறார்.
மேலும், இது குறித்து பேசிய அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, சசிகலா அவர்களின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பாருங்கள், தற்போது இது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை என்பதோடு முடித்துக் கொண்டார்.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தமிழ்நாடு அரசியல் களம் முற்றிலும் வேறுபட்டது. அதிமுக தலைமை பதவியை சசிகலா கைப்பற்றுவாரா அல்லது இதே அமைதியை தொடர்ந்து கடைப்பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சசிகலா கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி... 4 மாதங்கள் டூ 4 வருடங்கள்