சென்னை: எண்ணூர் விரைவு சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த புளியந்தோப்பை சேர்ந்த முகமது அலி, சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார். மாதவரம் அடுத்த வடம் பெரும்பாக்கம் சாலையில், தனது நான்கு வயது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்த விவேக் சுகுமார் தேங்கி இருந்த மணலில் சறுக்கி விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி ஏறியதில் சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடபழனி ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சறுக்கி விழுந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இவ்வாறான விபத்து செய்திகள் நாள்தோறும் சென்னை மக்களின் காதுகளில் ரீங்காரம் அடித்துக் கொண்டே இருக்கிறது. மக்களின் போக்குவரத்து பயணத்தை ஒருவித பதட்டத்தில் பயத்திலுமே வைத்துள்ளது, இந்த சென்னை மாநகர சாலைகள்.
ஒப்பந்தத்தை ரத்து செய்க: இவ்வாறான மக்களுள் ஒருவராக இருக்கும் புவியியல் தகவல் அமைப்புத்துறை வல்லுநரும் சமூக ஆர்வலருமான தயானந்த் கூறுகையில், “ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் அனைத்து சாலைகளையும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டு சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
ஆனால் இதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை தரமற்ற முறையில் மூடுகின்றனர். இதனால் மழை பெய்யும்போது எந்த பயனும் இல்லாமல், மீண்டும் அது மிகப்பெரிய பள்ளமாகத்தான் மாறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பருவ மழைக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளை கணக்கெடுத்து, அதில் ஏற்பட்டுள்ள சேதங்களை தரமான முறையில் சீர் செய்ய வேண்டும். சாலையை அமைக்கும் முன்பு அலுவலர்கள் வெளிப்படைத் தன்மையாக மக்களுக்கு அது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதன் பிறகு சாலைகளை அமைத்தால்தான், மக்களுக்கு எவ்வளவு தரமான சாலை அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிய வரும். தற்போது அமைக்கப்பட்ட சாலைகள் மழைநீர் தேங்காதவாறு அமைக்கப்படுவதில்லை. இதனால்தான் சாலை நடுவே மழைநீர் தேங்கி சேதமடைய முக்கிய காரணமாக உள்ளது.
ஒப்பந்ததாரர்கள் சாலையை சரியாக அமைக்கவில்லை என்றால், அவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
எத்தனை சாலைகளை கணக்கெடுப்பது? சென்னையில் 471 பேருந்து செல்லக்கூடிய வழித்தடங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர் உள் சாலைகளும் உள்ளன. இதில் 387 கிலோமீட்டர் நீளத்திற்கு மாநகராட்சி பராமரிப்பிலும், 260 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலும் உள்ளன.
இதில் பெரும்பாலான சாலைகள் ஒரு வருடத்திற்கு முன்பாக போடப்பட்ட சாலைகள்தான். ஆனால் பருவமழைக்கு பிறகு சென்னையில் உள்ள பல்வேறு சாலைகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. முக்கியமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு போடப்பட்ட தார் சாலை பருவமழைக்கு பிறகு சுமார் 30 சென்டிமீட்டர் அகலத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருங்களத்தூர் ,வண்டலூர் பகுயியில் சாலை பெயர்ந்து சல்லி கற்களாக சாலை முழுவதும் உள்ளன.
அதேபோல் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் சாலை முழுவதாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலை, அம்பத்தூர் எஸ்டேட் சாலை, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, விருகம்பாக்கம் வளசரபாக்கம் சாலை கீழ்பாக்கம், பெரம்பூர் பெரியார் நகர் பகுதிகள், மந்தவெளி மற்றும் போரூர் ஆகிய சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
எதற்காக இந்த சல்லி கற்கள்? இதுகுறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், “பருவமழை காலத்தில் மழைநீர் வடிகால், கால்வாய்கள், கழிவுநீர் சாக்கடைகள் குறித்துதான் அரசு அலுவலர்களும் அமைச்சர்களும் அதிகம் பேசுகின்றனர். ஆனால் மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை.
பருவமழைக்கு முன்னதாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. தற்போது பருவமழைக்கு பிறகு அது மேலும் சேதமடைந்து மோசம் அடைந்த நிலையில் உள்ளது. அரசு அலுவலர்களும், அமைச்சர்களும் தரமற்ற சாலையை நேரில் சென்று பார்வையிட்டால்தான், அங்குள்ள நிலைகள் பற்றி தெரியும்.
ஆனால் அலுவலர்கள் யாரும் அதை செய்வதில்லை. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கின்றோம் என்ற பெயரில், அலுவலர்கள் வெறும் வெட் மிக்சர் எனப்படும் சல்லி கற்களை மட்டும் போட்டு நாசம் செய்துள்ளனர். சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் அலுவலர்கள் நிதியை சரியாக செலவிடாமல் இருப்பதால்தான் தரமற்ற சாலை அமைக்கப்படுகிறது.
அரசு அலுவலர்கள் சிதலமடைந்த சாலைகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். தரம் உள்ள சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மாநகராட்சியின் பதில் என்ன? மேலும் இது குறித்துப் பேசிய சென்னை மாநகராட்சி அலுவலர் ஒருவர், “சென்னையில் பல்வேறு சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். மேலும் நெடுஞ்சாலைத் துறையினர் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை கணக்கெடுத்து விரைவில் சீரமைக்க உள்ளார்கள்” என தெரிவித்தார்.
இருப்பினும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலையில் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் பாதிப்படைக்கின்றனர். முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் இரவில் வாகனம் ஓட்டுவது பெரும் சவாலாக உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் சிதலமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு அருகே கோர விபத்து: 6 பேர் பலி; 6 பேர் படுகாயம்!