எவரும் அறியப்படாத பெயர்
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், 6 மாதங்களுக்கு மேலாக மாநில தலைவர் பதவி காலியாகவே இருந்தது. இந்தப் பொறுப்புக்கு முன்னணி தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன், நயினார் நாகேந்திரன், ராகவன் என ஏராளமானவர்கள் ரேஷில் இருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கட்சியின் தலைமை பெரிதும் அறியப்படாத எல்.முருகனை பாஜகவின் மாநில தலைவராக நியமித்துள்ளது. இதுபோன்ற எதிர்பாராத அறிவிப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே இடம்பெற்றன. தற்போது, பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் புது வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜகவில் இரண்டாவது பட்டியலின தலைவர்
பட்டியலினத்தை சேர்ந்த எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். 15 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். கட்சியின் வழக்குரைஞர் பிரிவில் பணியாற்றியுள்ளார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தலைவர் பதவிக்கு முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையும், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் நியமிக்காமல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது பாஜகவின் யுத்தியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டில் மருத்துவர் கிருபாநிதிக்கு பிறகு, 20 வருடங்கள் கழித்து பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எச்.ராஜா போன்ற திராவிட இயக்கங்களையும், பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதி அரசியலை எதிர்த்து அரசியல் செய்யாமல், நீரோட்டத்தில் கலக்க பாஜக முடிவு செய்துள்ளது என்றே தெரிகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாடு பாஜகவுக்கு வலிமையான தலைவர் ஒருவர் இருப்பதை மேலிடம் விரும்பவில்லை என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பட்டியலின மக்களின் வாக்குகளை பெற திட்டம்?
கொங்கு மண்டத்தில் உள்ள முன்னேறிய சமூகங்களிடையே பாஜகவுக்கு கணிசமான அளவுக்கு வாக்கு வங்கி உள்ளது. ஆனால், விழிம்பு நிலையில் இருக்கும் மக்களின் செல்வாக்கை பெற பட்டியலின வகுப்பைச் சார்ந்தவரை தலைவராக நியமித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கொங்கு பகுதி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்கு, அண்மையில் திமுக மாநிலங்களவையில் இடம் கொடுத்த நிலையில் அதற்கு ஈடு செய்யும் விதமாக பாஜகவின் செயல் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாஜகவில் எல்.முருகனின் பங்கு என்ன?
எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். அண்மையில், சமீபத்தில் திருச்சியில் பாஜக பிரமுகர் விஜய் ரகுவின் கொலைக்கு சமூகப் பிரச்னை காரணமல்ல என காவல்துறையும், அவரது குடும்பத்தினரும் கூறிய போதும், முருகன் இந்த கொலையில் லவ் ஜிகாத் பிரச்னை இருக்கிறதா என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
குடும்பப் பாரம்பரியமான பாஜகவிற்கு அவர் பல வழக்குகளை சந்தித்துள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். எல்.முருகனின் செயல்பாடுகளில் சமூக நீதிக்கான குரல் ஒலிக்குமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா?
கிருபாநிதி தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோதிலும் பாஜகவால் பட்டியலின மக்களின் வாக்குளைப் பெற முடியவில்லை. பட்டியலின மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. இந்த நேரத்தில் முருகனின் நியமனம் மூலம் அவர்களின் வாக்குகளை பாஜகவால் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே. அதேபோல், கிருபாநிதிக்கு அக்கட்சி மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அவருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மூத்த தலைவர்களை விட்டுவிட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மற்ற தலைவர்கள் இவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி அரசியல் வருகை, கூட்டணி பலிக்குமா?
ரஜினிகாந்த் அரசியல் தொடங்கும் முன்னரே பாஜகவினர் ரஜினிகாந்தின் குரலாக ஒலித்து வருகின்றனர். அவர் கட்சி தொடங்கினால், பாஜகவுடன் கூட்டணி பிம்பத்தில் எல்.முருகனின் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதசார்பற்ற கட்சிகளை எதிர்த்து பேசுவதற்கும், விசிக கட்சிக்கு எதிரான நிலைபாடுதான் எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டது என்றும் வெளிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மாலன் பேசியதாவது:
கிருபாநிதி இருந்த காலகட்டம் வேறு தற்போதுள்ள நிலைமை வேறு. மற்ற தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன். கிருபாநிதி இருந்த போது, எதிர் தரப்பில் இரண்டு பெரிய தலைவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து பட்டியலின மக்களின் ஆதரவு பெற முடிவில்லை. ஆனால், தற்போதைய நிலைமை வேறு. தேசிய கட்சியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இதுபோன்று நியமிக்கப்படவில்லை. இது பாராட்டப்பட வேண்டியது. அவர் அடித்தளத்தில் எவ்வாறு வேலை செய்வார் என்பதை பொருத்தே வெற்றி தோல்விகள் அமையும் என்று கருத்து தெரிவித்தார்.
சாதிப்பாரா புதிய பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழ்நாடு பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ, எம்.பி கூட இல்லை. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட குறுகிய காலத்தில் கணிசமான வாக்குகளை பெறுகின்றன. ஆனால், தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சியில் இருந்தும் பாஜகவால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாத நிலையே தொடர்கிறது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள முருகன் முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.
கட்சி தொண்டர்கள், மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் சமாளித்து கட்சியை அவர் எவ்வாறு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல் துறை - மக்களிடையே பரபரப்பு!