மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, பணி நேரம் எட்டு மணி நேரமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு 2015ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில், பணிச்சுமை காரணமாக மதுரை மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரக துணை இயக்குனர் இந்துமதி நேரில் ஆஜரானார். அப்போது அவர், 2015ஆம் ஆண்டு பணி நேரம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்படுவதாகவும், சில அவசர சூழ்நிலைகளின் போது மட்டும், மருத்துவர்கள் பணி நேரத்தை விட கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2015ஆம் ஆண்டு பணி நேரம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் கொண்டு வரப்படும் என உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க...கோயிலை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !