சென்னை: தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் பிற சமுதாயத்தினர் பாதிக்கப்படுவர்கள் எனவும் மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக அரசு நேற்று (ஜூலை. 27) அரசாணை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.
அப்போது, சட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதா? என இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கரோனா - ஒரே நாளில் 640 பேர் உயிரிழப்பு