நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் இந்திய அரசால் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அவர் குழந்தைகள் இந்நாட்டின் எதிர்காலம் எனத் தீர்க்கமாக நம்பினார், அவர்களுக்கு கல்வியில் முக்கியத்துவமும், முன்னேற்றமும் அளிக்க எண்ணினார். இதனைக் கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் குழந்தைகள் நலன் காக்கப்பட வேண்டும். அவர்களது உரிமைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி அறிவைப் புகட்டி குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் நலனை உள்ளடக்கிய தேசநலனில் அக்கறை செலுத்திய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளே குழந்தைகள் தினம்.
குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம்! அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எட்டி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.