சென்னை: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற பகுதிகளில் அருகில் உள்ள காடுகளில் மயில்களை பார்ப்பது அரிதாக இருக்கும். ஆனால் இப்பொழுது அந்த நிலமை மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
தற்போது நிலைமையை பார்க்கும்போது வீடுகளின் அருகிலும், விவசாய நிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மயில்கள் அகவும் காட்சியை நாள்தோறும் பார்க்க முடிகிறது.
குறையும் நரி எண்ணிக்கை
மயில்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு, காடுகளில் குள்ள நரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிக அளவிலான நரிகள் வேட்டையாடுதல், விஷம் வைத்தல் மூலம் கொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் உணவு சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் வன விலங்கு ஆர்வலர்கள்.
மேலும் நரிகளுக்கான கணக்கெடுப்பை நடத்தி அதன் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உணவு சங்கிலி பாதிப்பு
இது குறித்து நம்மிடம் பேசிய வன விலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி, "சக மாமிச விலங்குகளான கழுதைப்புலி, ஓநாய், நரி, குள்ளநரி, கரடி ஆகியவை உணவு சங்கிலி மற்றும் உணவு வலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குள்ளநரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வாழ்விடம் அழிப்பு மற்றும் வேட்டையாடுதலாக உள்ளது.
மூட நம்பிக்கை
நரிகள் குறித்து மக்கள் மத்தியில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. நரிகளின் கொம்புகளையும் ரோமத்தையும் வீட்டில் வைத்திருந்தால் மக்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளால், நரிகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டன.
நரிகள் பறவைகளின் முட்டைகளை குறிப்பாக மயில்களின் முட்டைகளை விரும்பி எடுத்துக்கொள்ளும். நரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இன்றைக்கு மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நரிகளுக்கென ஒரு கணக்கெடுப்பு இல்லை. தோராயமாக இந்தியாவில் 80,000 நரிகள் இருக்கலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே நரிகளின் கணக்கெடுப்பை வனத்துறை தொடங்க வேண்டும்” என்றார்.
வனவிலங்கு-மனிதர்கள் மோதல்
தொடர்ந்து, டிரஸ்ட் ஆப் இந்தியா நிறுவனர் சந்திரசேகர் கூறுகையில் "காடுகள் அழிவதை தடுக்கும் வரை நாம் இந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்க வேண்டும்.
வனத்துறையினர் வேட்டையாடுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்கு-மனிதர்கள் மோதலை தடுக்க வன அலுவலர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து தலைமை வன அலுவலர் சேகர் குமார் நீரஜ் நம்மிடம் தொலைபேசி வாயிலாக பேசுகையில், "வனத்துறை கவனமாக பரிசீலித்து வருகிறது. தற்போதைய சுற்றுச்சூழலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை.
நரிகள் கணக்கெடுக்கும் சூழ்நிலை வந்தால், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சென்சஸ் எடுக்கப்படும். அதிகளவிலான நரிகள் வேட்டையாடப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!