புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப். 25) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று (செப். 26) திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.பி.யின் உடலுக்கு 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “எஸ்.பி.பி. பத்ம விருது, தேசிய விருது பெற்றவர் என்பதால் மரியாதை நிமித்தமாக காவல் துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதால் எஸ்.பி.பி. உடலுக்கு காவல் துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தால் மட்டுமே ராணுவத்திடம் உடல் ஒப்படைக்கப்பட்டு உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, முப்படைகளும் இணைந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த மரியாதை மூத்த தேசிய தலைவர்கள், விவிஐபி-களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க...பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்: ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி!