சென்னை: இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையிலும், மக்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை பல்வேறு மாநிலங்களில் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் ஆலய பிரவேச உரிமை என்பது பகல் கனவாக உள்ளது.
பெரியாரின் வைக்கம் : கேரள மாநிலம் வைக்கத்தில் கோயில் அமைந்துள்ள பாதைகளின் வழியாக செல்லவும், ஆலய தரிசன உரிமையும் மறுக்கப்பட்டதால், ஆலய பிரவேச உரிமை வழங்க வேண்டும் என 1924ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாரின், நீண்ட போராட்டத்திற்கு பிறகு 1925ஆம் ஆண்டு அனைவரும் ஆலய பிரவேசம் செய்ய திருவிதாங்கூர் சமஸ்தானம் அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, கன்னியாகுமரி சுசீந்திரம் ஆலயம், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம், திருச்சி தாயுமானவர், மலைக்கோட்டை ஆலயம், திருவானைக்காவல் மற்றும் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திலும் ஆலய நுழைவுக்காக போராட்டம் பெரியாரின் ஒத்துழைப்புடன் நடத்தி தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய தரிசன உரிமைகள் மீட்கப்பட்டன.
தமிழகத்தில் முக்கியமான ஆலயங்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குறிப்பிட்ட உயர் ஜாதி இந்திக்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக 140 க்கும் மேற்பட்ட ஜாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
ஆலய பிரவேசம் : இதையடுத்து, காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 1939ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் நாள் இரவு 8 மணியளவில் கக்கன் (முன்னாள் அமைச்சர்), முருகானந்தம், சின்னையா, பூவலிங்கம், சண்முகம் ஆகியோரை அழைத்து சென்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் கருவறையில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்க அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். அதே ஆண்டு 1939 ஜூலை 11ஆம் தேதி "சென்னை மாகாண ஆலய பிரவேச சட்டம்" நிறைவேற்றப்பட்டது.
சட்டத்தின் முக்கிய அம்சமாக, எல்லோரும் கோவிலில் நுழையலாம் என்பது சட்டமல்ல. "சட்டத்தை மீறி நுழைந்தவர்களை அரசு விரும்பினால் பாதுகாக்கும்" என்பதுதான் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டது. இதனால் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.
புதிய ஆலய பிரவேச சட்டம் : 1939ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆலய பிரவேச சட்டம் பல இடங்களில் உயர்ந்த ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பதால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, 1947ஆம் ஆண்டு புதிய ஆலய பிரவேச சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி
* என்ன முறைப்படி ஆலயத்தில் உயர் ஜாதியனருக்கு வழிபாடு நடத்தப்படுகிறதோ? அதே நடைமுறையில் அனைவருக்கும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கும்) வழிபாடு நடத்தப்பட வேண்டும்.
* ஆலய வழிபாட்டு உரிமைகள் யாருக்காவது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உரிமை உள்ளது.
* இந்துவாக உள்ள அனைவரும், அதன் உட்பிரிவை சேர்ந்த இந்துக்களும் கோவில்களில் வழிபாடு செய்ய முழு உரிமை உள்ளது.
*ஆலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கோவிலுக்கு சொந்தமான குளம், கிணறு, புனிதமாக அறிவிக்கப்பட்ட வெளிப்படையாக உள்ள தண்ணீர்களில் குளிப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
* கோவிலுக்கு செல்வதற்கான அனைத்து பொதுப்பாதையையும் பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது.
* ஆலயத்துக்காக நியமிக்கப்படும் அறங்காவலர்கள் சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளை உருவாக்க அதிகாரம் உள்ளது. அந்த விதிமுறைகள் எந்த இந்துவுக்கும் எதிரானதாக இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மறுக்கப்படும் ஆலய நுழைவு: ஆனால், தமிழகத்தில் இன்றும் பல கிராமங்களில் சில சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுவதும், அதற்காக போராட்டங்கள் நடத்தப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சியர் பட்டியலினத்தவர்களை ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வைத்தார்.
2023ஆம் ஆண்டு கரூர் வீரணம்பட்டி காளியம்மன் ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நுழைய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஆலயத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை தென்முடியனூர் மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கவில்லை என தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின் தீர்வு காணப்பட்டது. விழுப்புரம் திரெளபதி அம்மன் ஆலயத்தில் நுழைய பட்டியலின சமுகத்தினரை அனுமதிக்க முடியாது என ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டது. தொடரும் இந்த அவலத்தை நீக்க சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம், தீர்வுகள் என்ன என வழக்கறிஞர்கள் தரும் கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்,
ஆலயங்களில் அனைவருக்கும் அனுமதி: இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் கூறுகையில், "இந்திய சுதந்தரத்துக்கு முன்பும், பின்னரும் ஏராளமான ஆலயங்கள் தமிழகத்தில் கட்டப்பட்டன. சில ஆலயங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்க மட்டுமே அனுமதி என்பதால், பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் தங்கள் உரிமையை பெற தங்களுக்கான ஆலயங்களை உருவாக்கினர்.
காலப்போக்கில், பணத்துக்கும், கெளரவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் வீதிக்கு வீதி காளான்கள் போல புதிதாக பல ஆலயங்கள் முளைத்தது. அதனால், இன்னும் பல சமுதாயத்திருக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்கிறது. அனைத்து ஆலயங்களையும் அறநிலையத்துறை கட்டுப்படுத்த முடியாது.
அனுமதி இல்லாமல் கட்டப்படும் ஆலயங்களை கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அனுமதி மறுக்கப்படும் ஆலயங்களில் கண்கானிப்பு கேமிராக்கள் நிறுவலாம். புகார்களை மாவட்ட அளவிலான அறநிலையத்துறை அதிகாரியிடம் அளிக்கலாம். பின்னர் காவல்துறை உதவியுடன் பிரச்சனைக்கு முடிவு எட்டப்படும்.
ஆதாரங்கள் இல்லாமல் அறநிலையத்துறையும் நீதிமன்றங்களும் நேரடியாக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. ஆலயங்களில் "தமிழில் அர்ச்சனை கட்டாயம்" என்ற அறிவிப்பு வெளியிட்ட போது, பலத்த எதிர்ப்புகளுக்கு பின் சமஸ்கிருதத்துடன் "தமிழிலும் அர்ச்சனை" எனவும், பின்னர் "தமிழில் அர்ச்சனை" செய்யப்படும் என மாற்றப்பட்டது. அதுபோல ஆலயங்களில் அனைவருக்கும் அனுமதி என்ற நிலையை ஏற்படுத்த பல வருடங்கள் ஆகலாம்" என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், "மனிதர்களிடையே மாற்றங்கள் வர வேண்டும். உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாட்டை நீக்க பள்ளி கல்லூரிகளில் தொடங்கி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எதிர்கால இந்தியா இளைஞர்களை கொண்டது. அந்த இளைஞர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாமல் எந்த சட்டத்தையும் நாம் அமல்படுத்த முடியாது.
வரதட்சணை வாங்குவது சட்டப்படி தவறு, ஆனால் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை கெளரவத்துக்காக வழங்கப்படுகிறது. யாரும் தவறு என கேள்வி எழுப்புவதில்லை. அனைவருக்கும் ஆலய வழிபாடு கிடைக்க கலப்பு திருமணங்கள் மட்டுமே தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என தெரிவிக்கிறார்.
மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படாத வரையில், சட்டங்கள் மட்டுமே இங்கே அனைத்தையும் மாற்றிவிடாது. மாற்றம் ஒன்றே மாறாதது என நம்புவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூகுள் ரிவியூவில் கருத்து பதிவிடுவது அவதூறு பரப்புவதா?.. கருத்து சுதந்திரத்தை கெடுத்துவிடாதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்!