சட்டப்பேரவையில் கேபிள் டிவி கட்டண உயர்வு தொடர்பாக காரசாரமான விவாதம் நடந்தது. திமுக சார்பில் பேசிய தா.மோ.அன்பரசன், "தமிழ்நாட்டில் கேபிள் கட்டணம் உயர்ந்துள்ளது. அதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ அலெக்சாண்டர், "கேபிள் டிவி கட்டணம் உயர்வுக்கு சன் டிவிதான் காரணம்" எனப் பேசினார். உடனடியாக திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படும். அரசு கேபிள் நிறுவனத்தில் மற்ற கேபிள் டிவி நிறுவனங்களை காட்டிலும் சன் குழுமத்தின் கேபிள் நிறுவனம்தான் 15 கோடி ரூபாய் பெற்றுவந்தது.
அரசு கேபிள் நிறுவனம் சார்பில் மாத வாடகை கட்டணத்தை குறைத்து கொள்ளுங்கள் என கேட்டு கொண்டதன் அடிப்படையில் மூன்று கோடி ரூபாய் பெறுவதற்கு சன் குழுமம் ஒப்புக்கொண்டு தற்போது மாதம்தோறும் ஐந்து கோடியே 45 லட்சம் ரூபாய் பெற்று வருகிறது.
கேபிள் கட்டணம் குறைக்க வேண்டும் என கேட்கும் உறுப்பினர்கள் சன் டிவி குடும்பத்திடம் சென்று இலவசமாக கொடுக்க சொல்லுங்கள் அப்போது கேபிள் கட்டணம் குறையும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா, சன் டிவிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை அது தனியார் நிறுவனம்" என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி,"சன் டிவிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்றால், சன் டிவி குறித்து பேசினால் திமுகவினர் அமளியில் ஈடுபடுவது ஏன்?" என்று கேட்டு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.