அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சுய அடையாளத்தின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்னா கோத்தாரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுய அடையாளத்தின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு, பணபலன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகே மூன்றாம் பாலினத்தவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், நலத்திட்ட உதவிகள் சரியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு பரிசோதனைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், தகுதியான நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவில் தவறில்லை. நலத்திட்ட உதவிகளைப் பெற மருத்துவ சான்றிதழ் கேட்கும் நடைமுறை புதிதானதும் அல்ல என்றனர்.
மேலும், மூன்றாம் பாலினத்தவருக்கான நலவாரியத்தில் திருநங்கைகள் உறுப்பினராக இல்லாமல் எப்படி அவர்களுக்கான திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திருநங்கைகள் நல வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களை நியமிப்பது குறித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.