தமிழ்நாட்டில், வெளிமாநிலத்தவர்களால் அரங்கேற்றப்படும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டேவருகிறது. குறிப்பாக வடமாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தாலும், அங்கிருக்கும் சைபர் கொள்ளையர்களாலும் தமிழ்நாடு மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அத்தோடு அருகில் இருக்கும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தலும் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இந்தக் குற்றங்களை அரங்கேற்றும் வெளிமாநிலத்தவர்கள் குற்றங்களைச் செய்துவிட்டு சொந்த ஊருக்குத் தப்பிச்சென்று பதுங்கிவிடுகின்றனர்.
தமிழ்நாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படையுடன் வெளிமாநிலங்கள் சென்று முகாமிட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்கின்றனர்.
ஆனால், இந்த வெளிமாநிலக் குற்றவாளிகளைப் பிடிப்பது தமிழ்நாடு காவல் துறையினருக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் மிரட்டல்கள், தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலிருந்து இந்தப் பிரச்சினை நிலவிவருகிறது.
நேற்று (ஏப். 27) அதிகாலை ஆந்திராவில் கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு தனிப்படை காவல் துறையினரை நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இதில், உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுபோன்று வெளிமாநிலத்திற்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கும்போது காவலர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
குறிப்பாக 1995-2006 காலகட்டத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட், பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்கச் செல்லும்போது, சந்தித்த சவால்கள் குறித்து புத்தகமாகவே வெளியிட்டார். அது தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் படம் வெளியானது. தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்திலிருந்து தற்போதுவரை வெளிமாநிலத்திற்குச் சென்று குற்றவாளிகளைப் பிடிப்பது காவல் துறையினருக்கு எளிதான காரியமல்ல.
கொளத்தூரில் நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தனிப்படை காவல் துறையினர் பிடிக்கச் செல்லும்போது, காவலர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து தனிப்படை காவலர் பெரியபாண்டி என்பவர் உயிரிழந்தார்.
மேலும் போலி அழைப்புதவி மையம், காவல் உயர் அலுவலர்கள் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்கி மோசடி செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் தனிப்படை காவலர்களை குற்றவாளிகளின் கிராம மக்கள் சிறைப்பிடித்து தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கிராம மக்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளிகளை அனுப்புவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு வடமாநிலக் காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி லலிதா ஜூவல்லரியில் ஐந்து கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானில் பதுங்கியிருந்த முக்கியக் கொள்ளையனைப் பிடிப்பதற்காகத் தனிப்படை சென்றபோது குறிப்பிட்ட சமூகத்தினர் காவல் துறையினரை கிராமத்திற்குள்ளே சேர்க்காமல் துரத்துவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனால், பல வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் காவல் துறை திணறிவருகிறது. பல வழக்குகளைக் கைவிட்டும் இருக்கின்றனர். இது போன்று குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது வட மாநிலக் காவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனத் தனிப்படையில் சென்ற காவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது போன்று பிறமாநிலங்களில் சென்று காவலர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகவே உள்ளதாகக் காவல் துறையில் ஓய்வுபெற்ற உயர் அலுவலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற எஸ்பி கருணாநிதி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "வெளிமாநிலங்களில் காவலர்கள் தாக்குதல் உள்ளாவதற்கு, காவல் துறையினரும் சில நேரங்களில் காரணமாக இருக்கின்றனர்.
வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், காவல் துறை தலைமையிடம் பேசி, உரிய அனுமதி, பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மற்ற மாநில காவல் துறை தலைவர்களிடம் நமது மாநில தலைமை அலுவலர்கள் பேசி, ஆயுதப் பாதுகாப்புப் பெற்றுத்தர வேண்டும்.
பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தின்பேரில் தகவல் கொடுக்காமல் செல்லும்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். வரும் காலங்களில் வெளிமாநிலங்களில் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் தனிப்படை காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு, பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
உயிரைக் கொடுத்து, குற்றவாளிகளைப் பிடிப்பதால், நமது குடும்பம்தான் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பணமோசடி செய்யும் வடமாநிலத்தவர்கள்!