சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பிரபாகரன். மணிமங்கலம் சேத்துப்பட்டைச் சேர்ந்த சசிகலா என்பவரை 2012ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு பிரபாகரன் குடும்பத்தோடு திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிஜிபி அலுவலக வாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினர் உடனடியாக பிரபாகரன் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலைப் பறித்துத் தடுத்துள்ளனர்.
தொடர்ந்து காவலர்கள் விசாரணையில், பிரபாகரனின் மனைவி சசிகலா மூலம் வரவேண்டிய சொத்துகளை, சாதி மறுப்புத் திருமணத்தைக் காரணம்காட்டி மணிமங்கலம் சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வாசு, சங்கர் ஆகியோர், ரவுடி படப்பை குணாவுடன் சேர்ந்து சொத்துகளை அபகரித்ததாக வடக்கு மண்டல ஐஜியிடம் புகார் அளித்ததாக பிரபாகரன் கூறியுள்ளார்.
அதன்பின்பு, ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி.யிடம் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரவுடி படப்பை குணா, வாசு, சங்கர், பூபதி ஆகியோர் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவருவதாகக் கூறிய பிரபாகரன், இரண்டு குழந்தைகளோடு தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தன்னை எப்படியும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் பிரபாகரனின் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டு மூலம் ரூ.40 ஆயிரம் திருட்டு