சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் வென்ற கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
![அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_tcme.jpg)
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
![முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_c.jpg)
இதனிடையே, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சி மேயர் பதவிகளை திமுக தன்வசம் வைத்துக்கொள்ள திமுக முடிவு செய்துள்ளது. இச்சமயத்தில் நான்கு மாநகராட்சி துணை மேயர் பதவிகளைக் கூட்டணிக் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்திவருகின்றன. இப்படி ஒரு புறம் கூட்டணிக்குத் துணை மேயர் வாய்ப்பு தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னையில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கூட்டணி கட்சியின் கோரிக்கை
இதில், திருப்பூர், சிவகாசி, ஓசூர் நாகர்கோவில் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் நான்கு துணை மேயர் பதவி வழங்க வேண்டுமெனக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
கடலூர் துணை மேயர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் தங்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளது. கடலூர் நகராட்சியாக இருந்தபோது விசிக துணைத் தலைவர் பதவியைப் பெற்றிருந்தது.
இதனிடையே, 21 மாநகராட்சி மேயர் / துணை மேயர், 138 நகராட்சி, 489 பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நிலையில், மேயர் / துணை மேயர் தேர்தலுக்காக கவுன்சிலர் பட்டியலை அளிக்குமாறு திமுக தலைமை அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
![சென்னை மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் ?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_t.jpg)
முதல் பெண் மேயர்
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் திமுக 153, காங்கிரஸ் 13, சிபிஎம் 4, விசிக 4, மதிமுக 2, முஸ்லீம் லீக் 1, சிபிஐ 1 மற்றும் அதிமுக 15, பாஜக 1, அமமுக 1, 5 சுயேச்சை கவுன்சிலர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியல் இனப் பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி பட்டியல் இனத்திலுள்ள இருபாலருக்கும் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
![சென்னையின் அடுத்த மேயர் பிரியா?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-chennaimayor-7209106_25022022112727_2502f_1645768647_871.jpg)
சென்னையில் திமுகவில் வெற்றிபெற்றுள்ள பட்டியலின பெண் கவுன்சிலர்கள் வார்டு 28 கனிமொழி, 46ஆவது வார்டு ஆனந்தி, 47ஆவது வார்டு மணிமேகலை, 52ஆவது வார்டு கீதா, 53ஆவது வார்டு வேளாங்கண்ணி, 59ஆவது வார்டு சரஸ்வதி, 70ஆவது வார்டு ஸ்ரீதனி, 74ஆவது வார்டு பிரியா, 85ஆவது வார்டு பொற்கொடி, 111ஆவது வார்டு நந்தினி, 120ஆவது வார்டு மங்கை, 159ஆவது வார்டு அமுத பிரியா, 122ஆவது வார்டு ஷீபா ஆகியோர் மேயர் பதவிக்குத் தகுதி உடையவராக இருக்கின்றனர்.
![ஸ்டாலினின் செயல் பாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_tcmd.jpg)
உதயநிதியின் சிற்றரசு
சென்னையில் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில், திமுகவில் இருந்த முன்னாள் நிர்வாகி செங்கை சிவத்தின் பேத்தியான பிரியாவிற்கு மேயர் பதவி வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் 74ஆவது வார்டில் வெற்றிபெற்றுள்ளார். ஏற்கெனவே சென்னை துணை மேயரைப் பொறுத்தவரை சிற்றரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
![உதயநிதியின் சிற்றரசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_tcmed.jpg)
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக, திமுக நிர்வாகி சிற்றரசு மிகுதியாகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. சிற்றரசு சென்னையின் 110ஆவது வார்டில் 5,028 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இதனால் சிற்றரசுக்குத் துணை மேயர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் முதல் மூன்று பேர் கொண்ட பட்டியலைத் தலைமைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
![சென்னை மாநகராட்சிக்குத் துணை மேயராகும் சிற்றரசு?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_tcmdd.jpg)
ஸ்டாலினின் கனவுத்திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர மேயராகப் பொறுப்பு வகித்தபோது சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்காரச் சென்னை திட்டம் கொண்டுவரப்பட்டது.
சென்னையை பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்த மு.க. ஸ்டாலின் சிங்காரச் சென்னை 2.0 என்னும் கனவுத்திட்டம் எட்டு பிரிவுகளின்கீழ், 23 சிறப்பு திட்டங்களைக் கொண்டு செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
![சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14566673_tcm.jpg)
அதன்படி அந்தத் திட்டம் சிங்காரச் சென்னை 2.0 வாக புதுப்பொலிவு பெற உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி சென்னையைப் பன்னாட்டுத் தரத்துக்கு உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையும் படிங்க: பிடிஆர், மூர்த்தியுடன் களத்தில் முந்தும் தங்கம் தென்னரசு!