ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் முகிலன். தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அரசின் நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளை கண்டு மனம் வெதும்பி, அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு முழு நேர சமூகப் போராளியாக மாறினார்.
ஏனெனில், அவரது கண் முன்பாக பொதுப்பணித்துறையில் பல்வேறு அக்கிரமங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, சிறுவாணி மலைப்பகுதியில் உருவாகி திருப்பூர் மாவட்டம் வரை பாய்கின்ற நொய்யல் ஆற்றில், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியாகும் ரசாயண நீர் கலப்பதனால் ஏற்படும் பாதிப்புகளும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள், வாங்கியதை வாங்கிக் கொண்டு அலட்சியமாக இருந்ததே, முகிலன் பொதுப்பணித்துறை வேலையை தூக்கி எறிவதற்கு முக்கிய காரணம். ஏனெனில், நொய்யல் ஆற்றில் மக்கள் ஆசையுடன் குளித்து வந்ததை ரசித்த முகிலனால், அவர் கண்முன்னே நொய்யல் நாசமாவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொதுவாக, மண் மீதும் மக்கள் மீதும் காதல் கொண்டவர்களுக்கு அதிகார வர்க்கம் எதிரியாவது தானே இயற்கை. அதற்கு முகிலனும் விதிவிலக்கல்ல. மணல் திருட்டில் ஈடுபட்ட மாஃபியாக்களுக்கு எதிராக கர்ஜித்தார். அடுக்கடுக்கான ஆதாரங்களை சேகரித்தார். அதிகார வர்க்கத்திற்கு எதிராக வாள் சுழற்றினார். விளைவு, எதிரிகள் அதிகரித்தனர், காவல்துறையின் ‘வாண்டட்’ லிஸ்ட்டில் இவரின் பெயரும் இணைக்கப்பட்டது. பெரும் பணக்காரர்களின் அடியாட்களால் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால், நேசித்த ‘மண்’ணை காப்பதற்கான போராட்டத்தில் இருந்து மட்டும் பின்வாங்கவில்லை.
அந்த வகையில், தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வாலுக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த காவல் உயர் அலுவலர்களின் பங்களிப்பையும் தோலுரிக்கும் விதமாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார்.
‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில் உருவான அப்படத்தை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 2019, பிப்ரவரி 15ஆம் தேதி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். ‘ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அநீதியை இந்த படம் இடித்துரைக்கும். இன்று நான் இதை வெளியிடுகிறேன். இதனால் எனக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால், அது குறித்து எல்லாம் எனக்கு கவலையில்லை’ - ஆவணப்படத்தை வெளியிட்டபோது முகிலன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
அன்றைய தினமே மதுரைக்கு செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முகிலன் சென்றார். ஆனால், மதுரைக்கு செல்ல வேண்டியவர் திடீரென மாயமானார். எனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என செய்தியாளர்கள் முன்பு கூறிய அடுத்த சில மணி நேரங்களில், முகிலன் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 70 பேர் கொண்ட கும்பல் முகிலனை அடித்து துவைத்து தூக்கிப்போட்டதாக செய்தி உண்டு. அதேபோல், சிலர் முகிலனை சிறைபிடிப்பதும், பின்னர் இரண்டு மூன்று நாட்களில் விடுவிப்பதும் இயல்பாகவே இவரது வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருந்திருக்கின்றன. அதுபோல தான் தற்போதும், இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்தடைவார் என அவரது குடும்பத்தினரும், நலன் விரும்பிகளும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், நாட்கள் சதத்தை கடந்தபோது, எங்கே முகிலன் என்ற குரலில் பதற்றமும் தொற்றிக் கொண்டது.
பிப். 15 முகிலன் மாயமானார். அடுத்த மூன்று நாட்களில் பிப். 18ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே மாதம் 25ஆம் தேதி முகிலன் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து அவர்களும் தேடினார்கள், தேடினார்கள் தேடிக்கொண்டே இருந்தார்கள். இல்லாததை தேடுவதும், இருப்பதை மறைப்பதும் காவல் துறையினருக்கு புதிதா என்ன?. ஆனால், இணையதளங்களில் முகிலன் எங்கே..? என்ற கேள்வி மட்டும் தினமும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இதற்கிடையே, மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், “முகிலன் எங்கே சார்... ஏதேனும் துப்பு கிடைத்தனவா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘ஒவ்வொரு தனி நபருக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்க முடியாது’ என ஆகச்சிறந்ததொரு விளக்கத்தை வழங்கினார்.
இது இப்படி இருக்க, ‘முகிலன் எங்கே?’ என வெல்ஃபேர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபேஸ்புக்கில் கேட்ட கேள்விக்கு, ‘சமாதி’ என திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜன் செய்த கமெண்ட், முகிலன் மாயத்தின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்தது. அந்த சமயத்தில் தான், ஜூன் 6ஆம் தேதி முகிலன் வழக்கில் துப்பு கிடைத்திருப்பதாக சிபிசிஐடி தெரிவித்தது. இந்த வழக்கில் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு இது வழி வகுத்தாலும், நாட்கள் செல்ல செல்ல சந்தேகமும் வலுவடைந்துகொண்டே இருந்தது. இனிமேல் அவர் உயிருடன் வருவாரா என்ற அச்சமும் தன்னிச்சையாக தொற்றிக் கொண்டது.
‘ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்த’ கதையாக அரசும் நழுவியது. காவல் துறையும் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை! ஆனால், மக்கள் மட்டும் ‘முகிலன் எங்கே?’ என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும் விதமாக, 141 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை திருப்பதி ரயில் நிலையத்தில் அம்மாநில காவல் துறையினரால் முகிலன் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்தது. முகமெல்லாம் சவரம் செய்யாத தாடி, தண்ணீர் பார்க்காத தேகம் என ஆளே மாறிப்போயிருந்த முகிலனிடம், அவரின் போராட்ட குணம் மட்டும் அப்படியே இருந்தது.
மக்களின் நலனுக்காக எந்த நிலையிலும் அவர் தனது போராட்ட குணத்தை மட்டும் விட்டுவிடவில்லை. அதனால் தான் என்னவோ, இத்தனை நாட்கள் அவரை தமிழ்நாடு மிகவும் 'மிஸ்' செய்திருக்கிறது. தற்போது சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் முகிலன் விடுவிக்கப்பட்டதும், அவர் கிளப்ப இருக்கும் புயல்கள் எந்த வானிலை ஆய்வு மையத்தாலும் கணிக்க முடியாததாகவே இருக்கும் என்பதில் மட்டும் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.