சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொறடா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
அடையாள அட்டையுடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகிகள், தொண்டர்கள் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ. பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மிக்க கொறடா பதவி மூத்த உறுப்பினர் யாருக்காவது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வின்போது ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் கொறடா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதற்கு முன்னதாக கூட்டத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ் அடுத்தடுத்து வருகைதந்தனர். அப்போது பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் வாழ்க என்று கோஷமிட்டனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி வருகையின்போது அவருடைய ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷம் போட்டனர்.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் 60 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். வருகின்ற 21ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்