சென்னை: வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அக்டோபர் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அக்டோபர் 27ஆம் தேதி வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்கள் மாவட்ட அளவில் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக காணொலி வாயிலாக ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர், வேளாண்மைத்துறை இயக்குநர், உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வடகிழக்குப் பருவ மழை இயல்பாக அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கி டிசம்பர் வரை மொத்தம் 65 நாட்களில் 448 மிமீ மழை பெய்யும். குறைந்த நாட்களில் அதிக மழை என்பதுடன், அதிக வேகத்துடன் கூடிய புயல் காற்றும் வீசும் என்பதாலும், அதனால் பயிர்களுக்கு பலத்த சேதம் உண்டாகும்.
வேளாண் பணிகள் பாதிக்காமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் அனைத்து மாவட்ட அலுவலர்களையும் ஆய்வு செய்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் பின்வருமாறு:
- "கடந்த தென் மேற்குப் பருவத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான மழை பெய்ததால், மாநிலத்தில் உள்ள நீர்த் தேக்கங்கள் மற்றும் பாசன ஏரிகளில் உள்ள நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
- நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு குறித்த விவரங்களை தினமும் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
- நடப்பு சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் மொத்தம் 14 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 25.10.2021 முடிய 7.8 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், கரும்பு, பருத்தி, எண்ணெய்வித்துக்கள் போன்ற பயிர்களையும் சேர்த்து, அனைத்து வேளாண் பயிர்களில் 46.2 இலட்சம் எக்டர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 24.41 இலட்சம் எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- சம்பாப் பருவத்தில் ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 49, கோ 43, கோ 52, திருச்சி3, வெள்ளைப் பொன்னி, டிகேஎம்13, விஜிடி1, என்எல்ஆர்34449, ஆர்என்ஆர்15048 போன்ற மத்திய கால இரகங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு போதுமான அளவு தரமான விதைகளை வட்டார வாரியாக அரசு விரிவாக்க மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பாசன நீரை மிச்சப்படுத்த நேரடி நெல் விதைப்பு முறையினை பிரபலப்படுத்துவதற்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
- இரசாயன உரங்களின் தேவை நடப்பாண்டில் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு உரங்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசின் இரசாயன உரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடந்த 22.10.2021 அன்று கடிதம் எழுதினார்.
- அதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை கூடுதலாக ஒதுக்கியுள்ளது. இக்கூடுதல் ஒதுக்கீட்டின்படி, நமக்கு தேவையான உரங்களை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
- காக்கிநாடா துறைமுகத்திற்கு 45,000 மெ.டன் டிஏபி உரத்தை இப்கோ நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. துறை அலுவலர்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியார் கடைகளில் ஆய்வு செய்து, இரசாயன உரங்கள் குறிப்பாக யூரியா, டிஏபி போன்றவை தேவைக்கேற்ப இருப்பு உள்ளதை தினமும் கண்காணிக்க வேண்டும்.
- கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் ஏதும் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று அரசு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வடகிழக்குப்பருவத்தில் பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் என்பதால், ஒவ்வொரு கிராமத்திலும், பூச்சி நோய் கண்காணிப்புத்திடல் அமைத்து, கூர்மையாக ஆய்விட்டு, அனைத்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.
- அனைத்து விவசாயிகளும் உரிய காலக்கெடுவுக்குள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு செய்வதற்கு விரிவாக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பயிரின் வளர்ச்சிக்கேற்ப பாசன நீர் தேவை எங்கு அதிகம் உள்ளது என்பதை கிராம அளவில் ஆய்வு செய்து, அதற்கேற்ப வாய்க்கால்களில் பாசன நீரை வழங்கிட பொதுப்பணித்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
- தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வெள்ளம், புயல் ஏற்படும் நாட்களில் உடனடியாக வடிகால் வசதியினை உருவாக்கி நெல் வயல்களில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை வடிகட்டுவதற்கு விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி மருத்துவர்களிடம் சிகிச்சை... கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - வேளாண் துறை அமைச்சர்