தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடங்கிய 40 நாள்களிலேயே, இதுவரையிலும் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளது வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து, உடல்நலக்குறைவின்மை ஆகியவையே யானைகள் உயிரிழப்புக்குக் காரணிகளாக அமைந்துள்ளன.
இவற்றுள் பிப்ரவரி 12 அன்று கோயம்புத்தூரின் வரப்பாளையத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒரு யானை உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகிரியின் அஞ்செட்டி அருகே சில நாள்களுக்கு முன்பு முயலை வேட்டையாடியபோது துரத்திய யானையை இருவர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனவிலங்கு வேட்டைத் தடுப்பில் தோல்வி
காடுகளின் அருகே பட்டா நிலங்களில் விவசாயம் செய்வோர், தங்களது விளை நிலங்களைப் பாதுகாக்க மின் வேலியை அமைக்கின்றனர். அந்த வேலியில் அதிக மின்னழுத்தம் உள்ள மின் கம்பியை இணைப்பதால், உணவுக்காகச் செல்லும் வனவிலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.
அதிக மின்னழுத்தம் பயன்படுத்தப்படுவதை மின்சாரத் துறை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. வனவிலங்கு வேட்டைத் தடுப்பில் ஏற்பட்ட தோல்வியுமே உயிரிழப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இது குறித்து வன விலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி பேசுகையில், "யானைகளின் உயிரிழப்புகள் தற்போது ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் யானைகளின் உயிரிழப்புகளுக்கு ரயில் விபத்து, மனித விலங்கு மோதல், வேட்டையாடுதல், மின்சார வேலி உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
யானைகள் இறப்பு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாட்டிலேயே அதிகளவில் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிமாக உள்ளன” என்றார்.
நீர்வள ஆதாரங்கள் புதுப்பிப்பு
தற்போது மழையின்றி காடுகளில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றால் உயிரிழக்க நேரிடுகின்றன.
மேலும் வனவிலங்கு உயிரியல் துறை பேராசியர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "வழக்கமாக கோடை காலத்தில் யானைகள் உயிரிழப்பு இயல்பு என்றாலும், நாம் வயது, பாலினம் வகையில் பார்க்க வேண்டும். இறப்பு விகிதம் அதிகம் என்றால் கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
காடுகளில் உள்ள பாரம்பரிய நீர்வள ஆதாரங்களைப் புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் வன விலங்குகள் அந்த இடங்களுக்குச் சென்று நீர் அருந்தி தங்களது தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்” என்றார்.
தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் அலைபேசி வாயிலாகப் பேசுகையில், "உயர் அழுத்த மின்கம்பியை இணைப்பது பெரிய குற்றமாகும். இது குறித்து மின்சார அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எந்த விவசாயிகளாவது சட்டத்திற்குப் புறம்பாக மின்வேலி அல்லது உயர் அழுத்த மின்கம்பியை இணைத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.
காப்புக்காடுகளில் வறட்சி நிலவுவதால் தொட்டிகள், குளம், குட்டைகளில் நீரை நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 474 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக ஒரு ஆர்டிஐ கூறுகிறது. அதில் தென்னிந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் 68 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இதையும் படிங்க: ஹாட்பாக்ஸ் விநியோகித்த திமுகவினர்: கையும் களவுமாகப் பிடித்த பொள்ளாச்சி ஜெயராமன்