சென்னை: ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இருவர் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரை அதிர்ச்சியடைய செய்தது. தீர்ப்பு வெளியான அன்றே மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்சின் ஆதரவாளர்களை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய(செப்.5) தினம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், ஓபிஎஸ்யை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி மாவட்டமான சேலத்தில் இருந்து அதிகளவில் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க, மற்றொருபுறம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அவரது ஆதரவாளரான புகழேந்தி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஈபிஎஸ் தரப்பில் ஜூன் 23 மற்றும் ஜூலை 11ஆம் தேதி என இரண்டு பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொதுக்குழுவும் செல்லும் என தீர்ப்பு வந்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்து ஒரு போட்டி பொதுக்குழு கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
ஒரு வேலை உச்சநீதிமன்றத்திலும் தங்கள் தரப்பிற்கு தீர்ப்பு பின்னடைவாக வரும் பட்சத்தில், போட்டி பொதுக்குழுவில் எடுக்கும் தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்பித்து, நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் கூறுவதற்கான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு ஈடுப்பட்டுள்ளனர். மேலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இந்த மாநாட்டில் வி.கே.சசிகலா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம் - எம்பி ரவீந்திரநாத்