சென்னை: சென்னையில் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வைகோ தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்திற்குக் கட்சியில் சிலர் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோவின் (headquarters Secretary) பணிகள் குறித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,
1. மதிமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக் கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது. கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.
3. கழகப் பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக் கழகச் செயலாளர் மேற்கொள்வார்.
4. கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல். அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.
5. மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாகத் தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்