சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் முன்னிலையில், புதிய துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட கடம்பூர் மாணிக்கராஜா, தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள குமரேசன் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்று தான் கூறினேன். அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமி உடன் சேருவோம் என்று நான் எங்கேயும் கூறியது இல்லை' எனத் தெரிவித்தார்.
மேலும், 'மெகா கூட்டணி என்று பேசுபவர்களும், அடுத்தவர்களைத் தாழ்த்தி பேசுபவர்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமியின் பேச்சு விரக்தியின் உச்சமாக உள்ளது. அதிமுக இன்று தலையில்லா முண்டமாக உள்ளது. திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
அதிமுகவில் ஒரே கட்சிக்கு ஒரு மாவட்டத்தில் இரண்டு செயலாளர்கள் இருக்கும் நிலை இருக்கிறது. வருங்காலத்தில் அவர்களது நிலையை அவர்கள் உணரும் காலம் வரும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழ்நாட்டில் நாங்கள் இருப்போம். எங்கள் இயக்கம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்.
பழனிசாமி தலைமையில் கூட்டணி வரும் என்பதை நான் நம்பவில்லை. இரட்டை இலைச்சின்னம் இல்லை என்றால் நகராட்சித்தேர்தலில் கூட எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற முடியாது. தனித்து நிற்கக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை. மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்த கட்சியை வட்டார கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. சுய நலத்திற்காக பதவிக்காக காலில் விழுவது, கழுத்தைப் பிடிப்பது, பழி வாங்குவது போன்ற பழக்கம் எங்களுக்கு இல்லை.
ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நானும் அவரை சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். திருந்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனபக்குவம் எங்களுக்கு உள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: எங்களுக்கு எல்லார் வேடமும் தெரியும்! புரியும்! - அமித்ஷாவுக்கு முரசொலி பதிலடி