இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய மாபெரும் தலைவர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழாவில் அவரை வணங்கி மகிழ்கிறோம். அவருடைய பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்று. அவருடைய ஆற்றல் மிக்க செயலால் ஒன்றுபட்ட பாரதத்தை கண்டோம்.
ஒன்றுபட்ட இந்தியாவில் தங்கள் தனி அடையாளத்தை விட " நான் இந்தியன் " என்ற பெருமை உணர்வை தூக்கி நிறுத்தி, இந்நாட்டில் தனக்கு எல்லா உரிமையும் உண்டு என உணர்ந்து நாட்டிற்கென நாம் ஆற்ற வேண்டிய சில கடமைகளும் உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.
வலிமையான பாரதத்தை உருவாக்கி, வழி நடத்தவும் செய்த இந்த இரும்பு மனிதரின் பாதையில் நாம் சென்று , இந்தியாவின் மகத்துவத்தை உலகம் உணர உறுதி பூணுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.