சென்னை: அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது "பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு தவறல்ல, ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிராக உள்ளது என்று அமர்வில் உள்ள இரு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமர்வில் உள்ள ஐந்து நீதிபதிகளுக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதில் அவர்கள் ஒருமித்த கருத்தில் உடன்படுகிறார்கள்.
ஓ.பி.சி பிரிவினருக்கு எதிரான சதி செயல் தான், இந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு திட்டம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரான சதி செயல், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது சாதிய அடிப்படையில் பொருளாதார அளவுகோலில் வகுக்கப்பட்ட திட்டம்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வைத் தாண்டி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை வலிமைப்படுத்துவதற்கான ஒரு திட்டம். சமூக நீதியை சீர்குலைக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம்.
அதற்கு இந்த இடஒதுக்கீடு வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தை பாஜக பயன்படுத்தி இருக்கிறது. ஏழைகள் என்ற பெயரால் சனாதன சக்திகள் சமூக நீதியை குழி தோண்டி புதைக்க பார்க்கிறார்கள். இந்த தீர்ப்பிர்க்கு ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனாதன சக்திகளின் சூது சூழ்ச்சி வேறு மாதிரியாக உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிக்கிக்கொள்ள வேண்டாம். ஜனநாயக சக்திகளின் பார்வையில் இருந்து இதனை பார்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி