சென்னை: 'நமக்கு நாமே' திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 'நமக்கு நாமே' திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் 'நமக்கு நாமே' திட்டத்தில் நீர் நிலைகளைப் புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள், தெரு விளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சூரிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் ஆகியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் மரக்கன்றுகளை நடுதல், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை (Smart Class) அமைத்தல், நவீன நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள், புதிய பாலங்கள், தகனமேடைகள் அமைத்தல் உள்ளிட்டப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள், நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், இணை/துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கிராம சபைக் கூட்டங்கள் அதிகரிப்பு - கனிமொழி எம்.பி.!