சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மாநகரின் ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல பகுதிகளில் மழைநீர் வடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அத்தகைய பகுதிகளில் மின்சார இணைப்பும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், சென்னை வளசரவாக்கம், சாய்ராம் நகர் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக இடுப்பளவிற்கு மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அப்பகுதியில் உள்ள அரசு சமுதாய நல மருத்துவமனையும் மழை வெள்ளத்தால் நிரம்பி உள்ளது. தற்போது அம்மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் இன்று வரை வெளியேற்றப்படாததால், சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வரை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
இதையும் படிங்க: மழை வெள்ளம் பாதித்த அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!
அப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரம் இணைப்பு இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து உள்ளது. மேலும், வீடுகளுக்குள் அவ்வப்போது பாம்பு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், தேங்கியுள்ள மழை நீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்சார வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்றவும், அப்பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கவும், மேலும் உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: "சென்னையில் 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும்"- தலைமைச் செயலாளர்!