சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை அஞ்சலகம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (58) நீதிமன்ற வளாகத்தில் தங்கி காவலாளியாகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் கோவிந்தசாமி நேற்றிரவு (நவம்பர் 14) பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று (நவம்பர் 15) பொதுமக்கள் சிலர் சென்றபோது மரத்தில் கோவிந்தசாமி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கோவிந்தசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், திருத்தணி பகுதியைச் சேர்ந்த நெசவாளர் கோபிக்கு, கோவிந்தசாமி நீதித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2016ஆம் ஆண்டு அவரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
வேலை வாங்கிக் கொடுக்காமல், பணத்தை கொடுக்க மறுத்த கோவிந்தசாமி மீது திருவள்ளூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோபி மனு கொடுத்துள்ளார்.
இந்த மனு அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதனையறிந்த கோவிந்தசாமி விசாரணைக்குப் பயந்து மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே இரட்டைப் படுகொலை - போலீசார் விசாரணை