சென்னை: நீலாங்கரை அருகே உள்ள இரண்டு தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையே 2010ஆம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதில், பிகாரைச் சேர்ந்த ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை காவலர்கள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைதுசெய்தனர்.
இதில், முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் என்ற மாணவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, நீலாங்கரை காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று (செப். 21) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆய்வாளர் மகேஷ்குமார் முன்னிலையாகவில்லை. அவருக்குப் பதிலாக வேறு ஒரு காவலர் முன்னிலையானார். இதனால் கோபமடைந்த நீதிபதி, ஆய்வாளர் மகேஷ்குமாருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார். காவல் ஆய்வாளருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவி குழந்தைகளை வீட்டினுள் வைத்து பூட்டிய கணவர்: 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு