சென்னை: பக்ரைன் மற்று துபாய் நாட்டில் இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மனிஷா(16) என்ற மாணவி பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு 4 தங்கப்பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மனிஷாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, சென்னை வந்த மனிஷாவிற்கு பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மனிஷா கூறியதாவது, ’பக்ரைன் மற்றும் துபாயில் நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 4 தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்குப் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் நான்கு மாதத்தில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு கட்டாயம் தங்கப் பதக்கம் வெல்வேன். அதற்காக உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: வெற்றிக்கோப்பையுடன் பேருந்தில் வலம்வந்த குஜராத் டைட்டன்ஸ்!