சென்னை: அதிமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர். எனவே, மத்திய படைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாக நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடுகையில், "40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இடம்பெற்றுள்ளன. உயிருடன் இல்லாத 8,000க்கும் மேற்பட்டோரின் பெயர்களும், இடம் மாறிய 13,000க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் நீக்கப்படவில்லை" என்றார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வாதாடும் போது, "இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பட்டியல் தனியாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய காவல்படையைச் சேர்ந்த 409 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படையினரும் பணியில் உள்ளனர். இடைத்தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும். புகைப்பட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும்" எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய மனுதாரர் சி.வி.சண்முகம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - கனிமொழி எம்.பி.பேட்டி