நகைச்சுவையால் 'பகுத்தறிவு' சிந்தனைகளை மக்களிடையே புகுத்திவந்ததில் 'பழுத்த ஆன்மிகவாதி' நடிகர் விவேக்கிற்குப் பெரும் பங்கு உண்டு. பல படங்களுக்கு நகைச்சுவை மூலம் உயிர் கொடுத்த அவர், தற்போது இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.
நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஏப்ரல் 17 அதிகாலை காலமானார். அவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இவரைப் பசுமை கலாம் என்று மக்கள் அன்போடு அழைத்துவந்தனர். அத்தகைய மாபெரும் தூண் சாய்ந்தது, நேற்று ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மரங்களின் தீரா காதலனின் இறுதி ஊர்வலத்தில், பொதுமக்கள் மரக்கன்றுகளை ஏந்தியபடி அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் 72 குண்டுகள் முழங்கக் காவல் துறையினர் மரியாதையுடன், மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.
இந்நிலையில், மூத்த அரசியல்வாதி தா. பாண்டியன் மறைவுக்கு விவேக் எழுதிய அஞ்சலி வார்த்தைகள் இன்று அவருக்கே பொருந்திவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டுவருகின்றனர்.
தா. பாண்டியன் மறைவுக்கு விவேக்கின் இரங்கல் பதிவில், "எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவைத்தான் ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் விவேக்கிற்கே பொருத்தி, நீங்கள் நட்டுவைத்த லட்சோப லட்ச மரங்களின் மூச்சாக, எங்களுடன் இறப்பிற்குப் பின்னும் இருப்பீர்கள் எனப் பதிவிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பாய்ஸ்க்கு அவர் நடிகர் மட்டுமில்லை: மிஸ் யூ மங்களம் சார்