விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சார்ந்த நீலகண்டன் என்பவரின் மகளும் கல்லூரி மாணவியுமான ராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் ஜூன் 10ஆம் தேதி குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
சமூக வலைதளமான முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தான் இந்தத் துயரமான சாவுகளுக்கு காரணம் என்பது தாளமுடியாத வேதனையாக உள்ளது. வாழவேண்டிய வயதில் இரு உயிர்கள் திடீரெனப் பலியாகும் ஒரு அவலநிலை, முகநூல் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் நிகழ்ந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைதளங்களை முற்றிலுமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், ராதிகா, விக்னேஷ் ஆகிய இருவரையும் இழந்து வாடுகிற அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது குறித்து காவல் துறையினர் நேரிய வழிமுறைகளில் விசாரணை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பிரேம்குமார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே, இந்த துயரச் சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைதகள் கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம்போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது. அடித்தட்டில் கிடந்து உழலும் மக்களிடையே சாதியின் பெயரால் மோதலைத் தூண்டிவிட்டு, சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும்தான் பாமகவின் திட்டமிட்ட சதிநோக்கமாக உள்ளது.
பாமகவின் இத்தகைய அரசியல் சதிநோக்கையும் சமூகவிரோதப் போக்கையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.