சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி பக்கம் வலம்வரும் வேட்பாளர்கள் தேர்தல் வந்தால் கையில் துடைப்பம், கரண்டி போன்றவற்றை எடுத்து பல வித்தைகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதேபோல அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பின்போது மக்களுடன் செல்பி எடுப்பது, குறைகளைக் கேட்பது, நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு மக்களைக் கவருவதற்கு முயற்சிகள் செய்துவருகின்றனர்.
அப்படி ஒரு நிகழ்வே சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவின் மகனும், விருகம்பாக்கம் தொகுதியின் திமுக வேட்பாளருமான பிரபாகர் ராஜா வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும்போது ஒரு கடையில் சென்று தோசை சுட்டு பரிமாறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் ஆதரவால் பிரபாகர் ராஜா விருகம்பாக்கத்தைக் கைப்பற்றியதால், கடுப்பாகிப்போன தனசேகரன் தனது மனைவியின் தாலி சங்கிலியிலும் உதயசூரியன் சின்னத்தை வைத்துள்ள தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என திமுக தலைமையகத்தில் தனக்கு ஆதரவு தேடினார்.
இதனால், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுவரும் அவர் மக்களைக் கவரும் வகையில் தோசை சுட்டு வாக்குச் சேகரித்தார். இதனை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிர்ந்துவருகின்றனர்.