சென்னை: ராஜ்பவனில் நேற்று பேராசிரியர் தர்மலிங்கத்தின் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்' மற்றும் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்' ஆகிய புத்தகங்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவை சிதைத்த கார்ல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது" என்று கூறியிருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ரவி சார், நீங்க சங்கி அல்ல, நீங்க அறிவாளி, நீங்க நல்ல படித்தவர், நீங்க நல்ல போலீஸ் அதிகாரி என நினைத்தோம். ஆனா இந்த ஒத்த பேச்சில நீங்க யாரு என காட்டிவிட்டீர்களே சார். இப்ப நீங்களும் சங்கி தான் ஒத்துகொள்கிறோம் எங்க கணிப்பு தவறு சார்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுநரை சங்கி என்ற கூறி காங்கிரஸ் எம்பி ஒருவர் பதிவிட்டுள்ள விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. அவரது ட்விட்டர் பதிவின் கீழ் பாஜக ஆதரவாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் விலக்கு பெற பொதுப் பள்ளிக்கான மேடை கூறிய தீர்வு!