சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தர வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (செப். 7) சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், "அதிகளவு மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் ஓணம், பக்ரீத் பண்டிகைக்கு அனுமதி அளித்ததால்தான் தற்போது அங்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் கரோனா பாதிப்பு குறையவில்லை" என்று குறிப்பிட்டார்.
பொது இடங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு
மேலும், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மட்டுமே அரசு கட்டுப்பாடு விதத்துள்ளதாகவும், இல்லங்களில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும், இதை யாரும் தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுவரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலையைத் தயாரிக்கும் மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: வடசென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு - தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் கண்டுபிடிப்பு!