சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் விதிகளை மீறி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில், தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், ஆதரவற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் பல புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள் மற்றும் விழுப்புரம் கெடார் போலீசார் சம்மந்தப்பட்ட ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில், 46 பெண்கள் உட்பட 167 பேரை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட பெண்களில் சிலர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்தனர்.
அதன் பேரில் விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக ஆசிரம நிர்வாகியாக கேரளாவைச் சேர்ந்த ஜுபின் பேபி உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 16 பெண்களிடம், தேசிய மகளிர் ஆணைய குழுவினர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு விபரங்கள் பெறப்பட்டதும் விசாரணை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.