சென்னை: இதுதொடர்பாக தன்னாட்சி அமைப்பின் தலைவர் சரவணன் விடுத்துள்ள பதிவில்," ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தன்னாட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் தொடர் பணியால் கிராமசபை ஓர் இயக்கமாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.
எளிய மக்கள் நேரடியாகப் பங்கேற்று, தங்களுக்காகத் திட்டமிடவும், நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கவும், கேள்விகள் எழுப்பவும் கிராமசபைகளைத் தவிர்த்து நம் நாட்டில் வேறென்ன ஜனநாயக ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்?
![village-council-meeting-held-after-20-months](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13195228_th.jpeg)
கிராமசபைகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு நேரடித் தொடர்பு கொண்டவை. கிராமசபையில் மக்களே எஜமானர்கள். அதனால்தான் ஆளும் வர்க்கம் கதி கலங்குகிறது. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதைப் பொறுத்துக் கொள்வார்களா அவர்கள்?
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபை ரத்து செய்யப்பட்டதையொட்டி, தன்னாட்சி, அறப்போர், வாய்ஸ் ஆஃப் பீப்புள், தோழன், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் போன்ற அமைப்புகள் கைகோர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிராமசபை மீட்பு வாரத்தை முன்னெடுத்தன.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு சமூக அமைப்புகளும், இளைஞர்களும் களம் கண்டனர். இருந்தும் அரசு இறங்கி வரவில்லை. கிராம அளவில் செயல்படும் எண்ணற்ற அமைப்புகளிருந்து, Institute of Grassroots Governance போன்ற மெத்தப் படித்த இளைஞர்களால் ஆன அமைப்புவரை அனைவரும் இணைந்து கிராமசபைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள். கிராமங்களை நோக்கி அரசியல் திரும்புகிறது என்பதை கட்சிகள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
![village-council-meeting-held-after-20-months](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13195228_t.jpeg)
இந்தச் சூழலில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் தலைவர் சுரேஷ் , கிராமசபையைக் கூட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை காரணம் காட்டி அதைத் தடுக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மூத்த வழக்கறிஞர் நாகசைலா, அவருடைய ஜூனியர் தன்வி ஆகியோரின் திறமையான வாதங்களாலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் அக்கறையாலும், அரசு வேறு வழியின்றி கிராமசபையை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளது. உரிமைகளை வென்றெடுப்பது எளிதல்ல. வென்றெடுத்த உரிமைகளை தக்க வைப்பதும் எளிதல்ல.
வரும் அக்டோபர் 2 கிராமசபை, பாதுகாப்போடும், கட்டுக்கோப்போடும் ஜனநாயகத் திருவிழாவாக களைகட்டட்டும். ஜனநாயகத்தில் மக்கள் சக்தியே மாபெரும் சக்தி என அரசு உணரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளருடன் நேர்காணல்