சென்னை: தேமுதிக சார்பில் விஜயகாந்தின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்த நாளைக்கொண்டாடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
விஜயகாந்தை பிறந்தநாளில் நேரில் சந்தித்து விட வேண்டும் என அதிகாலை முதலே மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்கள், திரையுலகப்பிரபலங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
நண்பகல் 12 மணி அளவில் தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்த விஜயகாந்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தின் வாயிலின் முன்பு அமர்ந்து தொண்டர்களை பார்த்து கைகூப்பி வணங்கிய விஜயகாந்திற்கு தொண்டர்கள் பூங்கொத்து சால்வை மற்றும் கும்பம் மரியாதை கொடுத்து வாழ்த்தினர்.
தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் இரு மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விஜயகாந்துடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் நடிகர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் விஜயகாந்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவரைச் சந்திக்க நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். அத்துடன் நடிகர்கள் மீசை ராஜேந்திரன், போண்டாமணி, முத்துக்காளை, அம்மா கிரியேஷன் சிவா, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சற்று ஓய்வில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பிறந்த நாளில் நேரடியாக சந்தித்து விட வேண்டும் என மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வந்தனர். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தேமுதிக இருப்பதாகவும்; நிச்சயம் தேமுதிக எழுச்சி பெற விஜயகாந்துடன் சேர்ந்து உழைப்போம் என நிர்வாகிகள் பேட்டியளித்தனர்.
மேலும் தேமுதிக அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 'விஜயகாந்தை , நடிகர் அரசியல்வாதியாக இல்லாமல் மனிதநேயமிக்க நபராக மக்கள் பார்க்கிறார்கள். பிறந்தநாள் தினத்தில் நடிகர் சங்கம் சார்பாவும் வந்து சந்தித்தார்கள். அரசியல் சினிமாவை கடந்து மனித நேயம் மிக்க தலைவர் கேப்டன்.
வறுமை ஒழிப்பு தினம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தொடரும். மின் கட்டணம், பெட்ரோல் டீசல் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்னையில் முன்னின்று போராட்டம் நடத்தி உள்ளோம். மேலும் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்கு முதல் எதிர்ப்புக் குரலை தேமுதிக எழுப்பும்.
தொண்டர்களை சந்தித்ததில் விஜயகாந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தொண்டர்களுக்கு மிக்க நன்றி. தேமுதிக கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் பதவியைக் கொடுத்தவர் கேப்டன் தான். கட்சி தலைமை குறித்து அடுத்த முடிவுகளை கேப்டன் தான் அறிவிப்பார். உட்கட்சி தேர்தல் முடிந்து விரைவில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்துக்கூறிய நடிகர் சங்கப்பொருளாளர் கார்த்தி!