நடிகர் விஜய்சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அப்போது கோயில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதையடுத்து, விஜய் சேதுபதி தொடர்ந்து இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாக, இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் விஜய் சேதுபதி மீது சமீபத்தில் புகார் கொடுத்தனர். இது விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய் சேதுபதி இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் காணொலியை உடனே நீக்கக் கோரி, விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அப்புகாரில், 'விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் அவர்கள், மேடையில் பேசிய நகைச்சுவை வசனத்தைப் பேசினார். அந்த நகைச்சுவை வசனத்தை முற்றிலுமாக மாற்றி, இந்துக்களுக்கு எதிராகப் பேசியது போல், காணொலியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் விஷமிகள் சிலர் பரப்பி உள்ளனர்.
இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி, அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர். இது விஜய் சேதுபதியின் நற்பெயரைக் கெடுக்கும் விதத்திலும், சமுதாய அமைதியைச் சீர்குலைக்கும் விதத்திலும் உள்ளது. எனவே, உடனடியாக விஜய் சேதுபதி பற்றிப் பேசிய கருத்துகளை அகற்றவும், விஷமிகள் சிலர் பரப்பிய அந்த காணொலியை நீக்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய்சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பு புகார்