”அகில இந்தியத் தளபதி விஜய் இயக்கம்” என்ற பெயரிலான கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி நேற்று (நவம்.05) தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயின் தந்தை தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களில் நடிகர் விஜய்யிடம் இருந்து காட்டமான அறிக்கை ஒன்று வெளியானது. அதில், "எனக்கும் என் தந்தை தொடங்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் இணைய வேண்டாம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன் தந்தைக்கே எச்சரிக்கை விடும் தொனியில் அவரது அறிக்கை அமைந்திருந்தது.
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும், "எனக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அந்தக் கட்சிக்கு பொருளாளர் இல்லை" என்று தெரிவித்தார். மேலும் விஜய்யும் அவரது தந்தையும் பேசிக்கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.எ.சந்திரசேகர், "நடிகர் விஜய்யை சுற்றி அவருக்கே தெரியாமல் ஆபத்துகள் நடந்து வருகின்றன. விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார். அதிலிருந்து அவரைக் காப்பாற்றவே நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
விஜய்யை சுற்றி சில தவறானவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் விஜய்யை சுற்றி ஒரு ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் வெளியிட்டதாக வெளியாகியுள்ள அறிக்கையை உண்மையில் அவர் வெளியிடவில்லை" என்று பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'விக்ரம்' ஆரம்பிக்கலாங்களா... வெறித்தனம் காட்டும் லோகேஷ் கனகராஜ் - கமல் கூட்டணி